Wednesday, December 2, 2009

நவம்பர் 26 - ஓராண்டுக்குப் பின்.............

நவம்பர் 26, 2008 இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான நாள்.
பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மும்பை மாநகரத்தை நிலைகுலைய வைக்க முடிந்த நாள்.
நாட்டின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என பொதுமக்கள் தெரிந்துகொண்ட நாள்.
அவசரகாலத்தில் மாநிலப் போலிஸாரின் திறமை / சக்தி எவ்வளவு என மும்பை மக்கள் தெரிந்துகொண்ட நாள்.
அரசு எந்திரம் எவ்வளவு மெத்தனமானது என பொதுமக்கள் விளங்கிக் கொண்ட நாள்.
நமது உயிர் எவ்வளவு மலிவானது மற்றும் எவ்வளவு பாதுகாப்பாய் நாமிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்ட மற்றொரு நாள்.
நாம் எவ்வளவு மோசமாய் தீவிரவாதிகளின் இலக்காய் இருக்கிறோம் என பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நமக்கு உணர்த்திய நாள்.
இயந்திரத் துப்பாகி வைத்திருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை வழக்கம்போல ஹைதரலிகாலத்து துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கும் மும்பை போலிஸாரை வைத்து பயங்கரவாதிகளை அடக்க அனுப்பப்பட்டு அதன்மூலம் அதிகபட்ச உயிர்ச்சேதம் நிகழ்ந்து, விளைவு மோசமானதும் கமாண்டோ படையினர் இறக்கப்பட்டு ஒரே ஒரு தீவிரவாதியை மட்டும் பிடித்து கிட்டத்தட்ட 172 பேரை பலி கொடுத்து மும்பையை மீட்டது கமாண்டோ படை.
ஓராண்டு கழிந்த பின்பு சற்று திரும்பிப் பார்த்தால் தீவிரவாதத்தை அடக்க இந்திய அரசு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்தால் நம்மைக் கடவுளைத்தவிர வேறுயாரும் காப்பாற்ற முடியாது, மாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.
உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை பாதுக்காத்த வகையில் செலவு என 30 கோடிக்கும் மேலாக என்று கணக்கு சொல்லப் படுகிறது. அவன்தான் கொலையாளி எனத் தெரிந்த பின்னும் ஏன் தூக்கில் தொங்கவிடாமல் இழுத்தடிக்கப் படுகிறது என்று ஜனநாயக, நீதிமன்ற, ராஜதந்திர நடைமுறைகள் மீது சாமானியனுக்கு வெறுப்பும், எரிச்சலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தைத் தாக்கிய அஃப்சல்குருவையே இன்னும் தூக்கில் தொங்க விடாத அரசு நம் அரசு. அவனுக்குக் கருணை மனு, அதற்குச் சப்பைகட்டு கட்ட மனித உரிமைகள் கோஷ்டிகளும், போலி மதச்சார்பற்ற கூட்டங்களும்..

தற்போது அஃப்சல் குரு தியாகியாகவும், மாவீரனாகவும் தெரிவான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், இந்திய விரோத சக்திகளுக்கும்.
மும்பைத் தாக்குதலில் நேரடித்தொடர்புகொண்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிய இந்தியா விரல்சூப்பிக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். அமெரிக்காவிடம் முறையீடு செய்வதும், அமெரிக்காவிடம் இவன் என்னை நுள்ளுறான் சார் என சொல்லிக்கொண்டிருப்பதுமாகக் கழிந்து கொண்டிருக்கும் நாட்கள். பாகிஸ்தான் நாளொரு பொய்யும், நேரத்திற்கொரு அறிக்கையும் விட்டு உலகத்தையும், இந்தியாவையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஏமாந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என யாருக்குத் தெரியாது?? இந்தியா இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறதோ??
மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை வார்த்தைகளால் எச்சரிக்காமல் ஒருமுறையாவது சாத்தினால் தான் கொட்டம் அடங்கும் என்று உரத்துச் சொல்லும் குரல்கள் பலவற்றை நமது செய்தி ஊடகங்களில் இப்போது நிறையவே கேட்க முடிகிறது.
இந்தியா ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில்தானே பங்களாதேஷ் ராணுவம் இந்திய எல்லைக் காவல்படையினரை நாய், நரிகளைத் தூக்கிச் செல்வதுப்போல தூக்கிக் கொண்டுவந்து போட்டது? அதைப்பார்த்த ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது.. ஆனால் பங்களாதேசுக்கு எச்சரிக்கை விட்டதுடன் நம்மை ஆள்பவர்கள் நிறுத்திக்கொண்டனர். இறந்தது அவர்களது மகவுகள் அல்லவே !
இந்திய மீனவர்கள் ஒவ்வொருநாளும் இலங்கை கடற்படையினரிடம் செத்துக் கொண்டிருப்பது எதனால்?? இந்திய அரசு ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தினால்தானே இத்துனூண்டு இலங்கைக்கூட திமிர் வருகிறது?
பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜ தந்திரமோ என்று மக்கள் சலிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தினம் மன்மோகன்சிங், ஒபாமா கொடுத்த சிவப்புக்கம்பள வரவேற்பில் மயங்கி, இந்தியாவில் அமுல்படுத்த வேண்டி ஒபாமா இடும் உத்தரவுகளை வாங்கிக்கொண்டிருக்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
நாளை மன்மோகன் சிங் பாகிஸ்தான் காந்திய கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு அஹிம்சைவாதிகளின் நாடு என அறிக்கை விட்டாலும் விடலாம். இந்தியர்களாகிய நாம்தான் எந்தவிதமான அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறோமே!
பிரதீபா பாட்டில் என்ற நமது நாட்டின் முதல் குடிமகளுக்கு போன ஆண்டு அவரது சக-பிரஜைகள் 172 பேர் இறந்த தினம் என்ற ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சம்பிரதாய அஞ்சலி கூட செலுத்துவதற்கு அவருக்கு நேரமும், மனமும் இல்லை போலிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படும் நம்மை ஆளுவோர்களுக்கு புதிது புதிதாய் ஊழல் செய்வதுபற்றியே சிந்தனை. இறந்த பொதுமக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ இரங்கல் தெரிவிக்கக்கூட யாருமில்லாத அளவு பொதுமக்களும், நாட்டுக்காக போராடிய கமாண்டோக்களும், போலிசாரும் அனாதைகளாக்கப்பட்ட அவலம்.
எத்தனை தூரம் தான் மக்கள் கஷ்டங்களையும், பாதுகாப்பின்மையையும் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும், மீண்டும் திரும்புவார்கள்?
ஒருநாள் மக்கள் மொத்தமாய் பொங்கி எழுந்தால்.. ? தனது பாதுகாப்பை தானே உறுதிசெய்துகொள்வதற்காக சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தால்.. ?
இதையெல்லாம் தனது மக்கள் மீது அக்கறைகொண்ட நலம்சார் அரசாய் இருந்திருந்தால் கவனத்தில் கொண்டு இந்த கொடுங்குற்றத்தை இழைத்தவர்களையும், அதற்கு உடந்தையாய் இருந்தவர்களையும் தண்டித்திருக்கும். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் தனது நலனையும், தனது குடும்ப வாரிசுகளின் நலனையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் அரசியல்வாதிகள்.
வாக்கு வங்கிகளுக்காக நாட்டின் பாதுகாப்பையே அடகுவைக்கத் துணியும் அரசியல்வாதிகள்.
யார் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன, தான் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டுப் பொறுக்க எந்த தேசத்துரோகத்தையும் சாமர்த்தியமாக மறைக்கும், அல்லது அதை தேசத்துரோகமே இல்லை என சாதிக்கும் அவலம் செய்யும் அரசியல்வாதிகள்.
நாட்டுக்காக உயிரைவிட்ட அதிகாரிகளின் மனைவிமார்கள் தங்களது கனவர்களுக்கு கிடைத்த பதக்கங்களை அரசாங்கத்திடமே திருப்பி அளித்த பின்னும்கூட ரோஷம் வராத முரட்டுத்தோல் கொண்ட அரசியல்வாதிகள்.
பாதுகாப்புப்டையினரின் பாதுகாப்புக் கவசங்களில்கூட ஊழல்புரிந்து சில அதிகாரிகளை இழக்கும் அளவு ஊழல் புரையோடிப்போன அரசியல்வாதிகள்
இத்தனைமுறை நமது நாட்டுக்கெதிராக வன்முறையைத் தூண்டிவிடும் பாகிஸ்தானை ஒருமுறையாவது பதிலடி கொடுக்காமல், மீண்டும், மீண்டும் தனது மக்களையே பலிகொடுத்துக்கொண்டிருக்க தொடர்ந்து வரும் அரசாங்கங்கள்.
”வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்தபாரத மாதாவின் பதமலர்க்கே.. “
என்று பாரதி பாடிய வீரத்தாய் இவ்வளவு மோசடியும் பேடித்தனமும் கொண்ட குழந்தைகளையா பெற்றெடுத்தாள்?

No comments:

Post a Comment